வெண்முரசு

 

வெண்முரசு


வெண்முரசு மொத்த மகாபாரதத்தையும் மறுபுனைவு செய்து தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனால் எழுதப்பட்டுவரும் நவீன தமிழ் நாவல் வரிசை. ஜெயமோகனால் அவரது இணையதளத்தில் 2014ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, தினமும் ஒரு அத்தியாயம் வீதம் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதற்கான அறிவிப்பில்  ஜெயமோகன், இந்நாவல் ஐந்நூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள் உடையது இது எனச் சொல்லியிருந்தார். அதை பத்தாண்டுகள் எழுதுவேன் எனவும் கூறியிருந்தார். ஆனால் நாவல் எழுத ஆரம்பித்த பிறகு மகாபாரதத்தின் விரிவு காரணமாக, நூல் எண்ணிக்கை 25லிருந்து 30வரை செல்லலாம் என்று தற்போது கூறியிருக்கிறார். அப்படி எழுதி முடிக்கப்படும் நாவல் 25000பக்கங்கள் கொண்டிருக்கும் என்றும் சொல்கிறார்.இதன்படி நிறைவடையும் பொழுது வெண்முரசு, உலக இலக்கியத்தின் மிகப்பெரிய நாவல் வரிசையாகி இருக்கும். 

வியாசரின் மகாபாரதத்தை மட்டும் ஆதாரமாகக் கொள்ளாமல், மகாபாரதக் கதைகளையும் கதை மாந்தர்களையும் வெவ்வேறு விதமாக மொழிந்துள்ள அனைத்துப் புராண, நவீன மற்றும் நாட்டார் பிரதிகளையும் கணக்கில் கொண்டு சொல்வது இது .

இந்நாவல் தினந்தோறும் அவரது இணையத்தளத்தில் ஒரு நாளின் தொடக்கத்தில் பதிவேற்றப்படுகிறது. இந்நாவலுக்கென்றே தனியாக ஓவியத்தை வரைபவர் ஓவியர் ஷண்முகவேல் ஆவார். கிழக்கு பதிப்பகம் ஜெயமோகன் எழுதும் மகாபாரத நாவலான வெண்முரசின் அனைத்து நாவல்களையும் சாதாரணப் பதிப்பாகவும் சேகரிப்பாளர்கள் பதிப்பு எனும் செம்பதிப்பாகவும் வெளியிடுகிறது.

இந்தப் பெருநாவல், பதிமூன்று நூல்கள் கடந்து , பதினான்காவது நாவலான நீர்க்கோலம் ஜெயமோகன் தளத்தில் இப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.


ஜெயமோகனின் மகாபாரத அறிமுகம் பெரும்பாலான இந்தியர்களைப் போல மிக இளம் வயதிலேயே கிடைத்த ஒன்று. தனது அம்மா மலையாளத்தின் துஞ்சத்து எழுத்தச்சனின் மகாபாரதம் கிளிப்பாட்டை வாசித்த முறையும் சடங்குகளும் ஒரு தொடக்கமாக அவருக்கு அமைந்தது. ஒட்டுமொத்த கதையை அறிந்தபிறகு அவர் வாழ்க்கையின் தொடக்க காலங்களை கழித்த திருவட்டாரில், கோயிலின் முன்னிருக்கும் கதகளி மண்டபத்தில் அரங்கேறிய கதகளி காட்சிகள் அடுத்த கட்ட வளர்ச்சி. அங்கு அந்த மேடையில் அவர் கண்ட துரியோதன, குந்தி, கர்ண கதாப்பாத்திரங்கள் அவரை உலுக்கிய கவர்ந்த விதங்களை விரிவாகவே அவர் கட்டுரைகளில் காணலாம் . வியாசரை பற்றிய உரையில், “அவனுக்கு கொடுக்கும் அளவிற்கு எவருடைய கையும் உயரம் கிடையாது. எல்லாரும் சின்ன மனிதர்கள். சின்ன மனிதர்களின் நடுவே பெரிய கால்களுடனும் பெரிய சிந்தனைகளுடனும் நிமிர்ந்த தலையுடனும் சென்ற ஒரு மனிதனைப் பார்த்து நான் அழுதிருக்கிறேன், ஐந்து வயதில்...” என்று கர்ணனைப் பற்றி நெகிழ்ந்து அவர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

தனது இளமையில் அவர் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றபோது, கன்னியாகுமரியில் தொடங்கி இந்தியாவின் அனைத்து எல்லைகளுக்கும் பயணிக்கலானார். பல்வேறு வண்ணங்கள் கொண்டிருந்த இந்திய நிலங்களின் பண்பாட்டின் வழியே செல்லும்போது மகாபாரதமும் அதன் பிற பரிமாணங்களும் மேலும் வளர்ந்தன. வாசிப்போடு மட்டுமல்லாமல் அதை நேரடியாக காணும் தருணங்களும் அவருக்கு அப்பயணங்கள் வழியே கிடைத்தது.

பின்னர் ஊர் திரும்பி, எழுத்தாளராகி தனது குருவாகிய நித்ய சைதன்ய யதியை கண்டுகொண்ட பிறகு இந்திய தத்துவ மரபுகளிலும் அதன் நூல்களிலும் ஆழ்ந்த பயிற்சியும் விரிவான விவாதங்களும் ஜெயமோகனுக்கு அமைந்தன. அங்கு அவர் விரிவாக பயின்ற நூல்களில் “பகவத் கீதை”யும் அடங்கும்.

அவர் சிறுகதைகள் எழுதி தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமாகியிருந்த 1980-90களிளும் பல்வேறு விதமான கதைகளை எழுதியிருக்கிறார். தனது முதல் பெருநாவலான விஷ்ணுபுரம் எழுதிக்கொண்டிருந்த இதே வேளையில், இடையில் திசைகளின் நடுவே, பத்மவியூகம், நதிக்கரையில் போன்ற கதைகளை எழுதி பிரசுரித்துள்ளார். காவியம்,இறுதிவிஷம் போன்ற குறுநாவல்கள், களம், அதர்வம் போன்ற சிறுகதைகள், வடக்குமுகம், பதுமை போன்ற நாடகங்கள் அனைத்தும் மகாபாரதப் பின்னணியில் அமைந்தவை.எழுத வந்த தொடக்க காலகட்டம் முதலே ஜெயமோகனின் எழுத்துக்களில் மகாபாரதம் சார்ந்த புனைவு முயற்சிகளையும், பிற குறிப்புகள் நிகழ்வுகள் போன்றவற்றையும் தொடர்ந்து வருவதை காணமுடியும். மகாபாரதம் தொடர்பான முயற்சிகளை கண்டுகொள்வதோடு அவற்றை தமிழில் அறிமுகப் படுத்துவதையும் செய்து வந்துள்ளார்.. . ஒரு யுகத்தின் முடிவு, பருவம், இரண்டாம் இடம், இனி நான் உறங்கட்டும் போன்ற நூல்களை தொடர்ந்து சுட்டி காட்டுவதோடு, சமகால எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணனின் மகாபாரத பின்னணியில் அமைந்த நவீன நாவலான உப பாண்டவத்திற்கு இவர் எழுதிய விமர்சனமும் குறிப்பிடத்தக்கது .

ஒரு உரையாடலில், கேரள எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணனிடம் தான் பாரதத்தை முழுதாக நாவலாக எழுதப்போகிறேன் என விளையாட்டாக சொன்னபோது, மிகுந்த ஆவலுடன் தான் நிச்சயம் எழுதுவேன் என அவர் சொன்னதையும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

2013ல் இலங்கை தமிழ் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பிற்கு அளிக்கப்பட்ட விஷ்ணுபுரம் விருது விழா முடிந்து வீடு திரும்பி, தன் குழந்தைகளுடன் தற்செயலாக மகாபாரதம் குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது இந்நாவல் பற்றிய எண்ணம் தோன்றியது. இது தன்னுடைய பல ஆண்டு கனவென்றும், பெரிய முயற்சி என்பதால் ஒத்திப் போடப்பட்டதாகவும், இப்போது தன் மகள் சைதன்யா கேட்டதுடன் சிறு திட்டத்தோடு தொடங்குவதாகவும் அறிவிப்பில் கூறியிருந்தார். நாவல் ஜெயமோகனால் 2013 கிறிஸ்துமஸ் அன்று தொடங்கப்பட்டு, 2014 ஜனவரி முதல் தேதி முதல் அவரது இணையதளத்தில் முதல் நாவலான முதற்கனல் வெளியானது. இந்நாவலில் அத்தியாயத்திற்கு ஒரு ஓவியமென முடிவு செய்யப்பட்டு, ஓவியர் ஷண்முகவேலின் கற்பனை மிகுந்த ஓவியங்களோடு வெளிவந்துகொண்டிருக்கிறது. இணையத்தில் எழுதப்படும் ஒரு தமிழ் நாவல் அதெற்கென பிரத்தியேகமான ஓவியங்களுடன் வெளிவருவது இதுவே முதல் முறை.

நூல்களும் வெளியீடும்

ஜெயமோகன் தளத்தில் ஒவ்வொரு நாவலும் தினமும் ஒரு அத்தியாயமென வெளிவரும். ஒவ்வொரு நாவல்களுக்கு இடையிலும் ஆசிரியர் அடுத்த நாவலுக்கு ஆயத்தமாகும் இடைவெளி ஒன்றும் தொடரும்.

  1. முதற்கனல் ஜனவரி 1, 2014ல் தொடங்கி பிப்ருவரி பிற்பாதியில் நிறைவுற்றது.
  2. மழைப்பாடல் மே 2014ல் நிறைவுற்றது.
  3. வண்ணக்கடல் ஜூன் 2014லிருந்து ஆகஸ்ட் 2014 வரை நீண்டது.
  4. நீலம் 2014 ஆகஸ்டில் இருந்து செப்டம்பர் வரை எழுதப்பட்டது.
  5. பிரயாகை 2014 அக்டோபரில் இருந்து 2015 ஜனவரி வரை எழுதப்பட்டது.
  6. வெண்முகில்நகரம் 2015 பிப்ருவரியில் தொடங்கி மே மாதம் நிறைவுற்றது.
  7. இந்திரநீலம் ஜூன் 1, 2015ல் தொடங்கி ஆகஸ்டில் முடிந்தது.
  8. காண்டீபம் 2015 செப்டெம்பரில் இருந்து நவம்பர் வரை சென்றது.
  9. வெய்யோன் டிசம்பர் 2015லிருந்து 2016 மார்ச் தொடக்கம் வரை நீண்டது.
  10. பன்னிரு படைக்களம் 2016ன் மார்ச் பிற்பாதியிலிருந்து ஜூன் வரை எழுதப்பட்டது.
  11. சொல்வளர்காடு ஜூலை 2016ல் தொடங்கபெற்று செப்டெம்பரில் நிறைவுற்றது.
  12. கிராதம் 2016 அக்டோபரில் இருந்து ஜனவரி 2017 வரை வெளிவந்தது.
  13. மாமலர் பிப்ருவரி 1, 2017இல் தொடங்கி மே 2017இல் நிறைவுற்றது.
  14. நீர்க்கோலம் மே 25, 2017இல் தொடங்கி ஆகஸ்ட் 29 2017இல் நிறைவுற்றது.
  15. எழுதழல் செம்டம்பர் 2017இல் தொடங்கி டிசம்பர் 2017இல் நிறைவுற்றது.
  16. குருதிச்சாரல் டிசம்பர் 2017இல் தொடங்கி மார்ச் 2018இல் நிறைவுற்றது.
  17. இமைக்கணம் மார்ச் 2018இல் தொடங்கி மே 2018இல் நிறைவுற்றது.
  18. செந்நா வேங்கை ஜூன் 2018இல் தொடங்கி ஆகஸ்ட் 2018இல் நிறைவுற்றது.
  19. திசைதேர் வெள்ளம் செப்டம்பர் 2018இல் தொடங்கி நவம்பர் 2018இல் நிறைவுற்றது.
  20. கார்கடல் டிசம்பர் 2018இல் தொடங்கி மார்ச் 2019இல் நிறைவுற்றது.
  21. இருட்கனி ஏப்ரல் 2019இல் தொடங்கி ஜூன் 2019இல் நிறைவுற்றது.
  22. தீயின் எடை ஜூலை 2019இல் தொடங்கி ஆகஸ்ட் 2019இல் நிறைவுற்றது.
  23. நீர்ச்சுடர் செப்டம்பர் 2019இல் தொடங்கியது.
  24. களிற்றியானை நிரை
  25. கல்பொருசிறுநுரை
  26. முதலாவிண்

இவை அனைத்தும் இணையத்தில் வெளியான நாட்களை குறிப்பவை. வெண்முரசை முதலில் பதிப்பித்த பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் ஆகும்[15][16]. அது வெண்முரசின் முதல் நான்கு நாவல்களை வெளியிட்டது. முதல் ஆண்டின் இறுதியில் நீலம் வரையிலான நான்கு நாவல்களுக்கு வெளியீட்டு விழா சென்னை எக்மோர் அரங்கத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் அசோகமித்திரன்இளையராஜாகமல்ஹாசன்பிரபஞ்சன்நாஞ்சில் நாடன்பி.ஏ.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு இம்முயற்சியை வாழ்த்தினர் .மேலும் மகாபாரதத்தை தங்கள் வாழ்நாள் முழுதும் பிரசங்க வடிவிலும் கூத்து வடிவிலும் வழங்கி வரும் கலைஞர்கள் ஐந்து பேர் விழாவில் கௌரவிக்கபட்டனர் .நவம்பர் 9, 2014 அன்று நடந்த இவ்விழாவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்தது.

நற்றினைக்கு பின் இப்புத்தகத்தின் முந்தைய, அடுத்த பாகங்களை கிழக்கு பதிப்பகம் கொண்டுவரத் தொடங்கியது. வெண்முரசின் வெளியீடு, அதன் சிறப்பு வாசகர்களுக்கான கெட்டி அட்டையும் வண்ணப்படங்களும் கொண்ட செம்பதிப்பாகவும், சந்தைகளில் விற்கும் சாதாரண அட்டை பதிப்பாகவும் வெளிவருகிறது.

கதைச்சுருக்கம்

முதல் நாவலான முதற்கனல், மொத்த கதையோட்டத்திற்கான ஒரு முன்வரைவை அளித்து தொடங்குகிறது. ஆஸ்திகன் என்ற முனிமைந்தன் தன் அன்னையிடம் கதை கேட்பதாக தொடங்கும் நாவல், ஜனமேஜயனின் வேள்வியை இடைமறித்து வியாசரை வரவழைத்து தீர்வு கேட்பதிலிருந்து மைய கதையோட்டத்தை வந்தடைகிறது. வியாசர் தன் ‘ஜய’ எனும் காப்பியத்தை அவையில் அரங்கேற்றுகிறார். அஸ்தினபுரியின், குரு வம்சத்தின் கதையாக வளரும் இன்னொரு கதைச்சரடு, பீஷ்மரை வெல்லமுடியாத அம்பையின் அனல் சிகண்டியாக உருமாறி பீஷ்மரிடமே இறுதியில் வரும் இடத்தில் முடிகிறது.

மழைப்பாடல், அம்பிகை அம்பாலிகை சத்யவதி ஆகியோரின் கதாப்பாத்திரச் சித்தரிப்பை விரிவாக நிகழ்த்திச் செல்லும் இப்பெருநாவல், அவர் மைந்தரான திருதராஷ்டிரன் பாண்டு ஆகியோரின் இளமை பருவங்களையும் அவர்களின் சுயம்வரங்களையும் விரிவான பண்பாட்டு வரலாற்று சித்தரிப்புடன் வரைகிறது. பாண்டவர் பிறப்பிற்கு பின் இறுதியில் விளக்கமுடியாத கவித்துவச் சித்தரிப்புடன் முடியும் இந்நாவல், மகாபாரதத்தை, ஆடி தொடங்குபவர்களான குந்தி, சகுனி, விதுரர் ஆகியோரின் விழைவுகளையும் நெய்தெடுப்பது.

வண்ணக்கடல், சங்க பாணனாகிய இளநாகன் பாரத நிலத்தில் ஒரு முனையில் தொடங்கி மறுமுனை வரும்வரை, குரு வம்சத்தின் கதைகளை கேட்டு அறிந்து வருவதாய் உள்ளது ஒரு சரடென்றால் பிறிதொன்று பாண்டவகௌரவர்களின் இளமையை தொட்டுசெல்வது. துரோணர், பரசுராமர், ஏகலைவன், துரியோதனன் போன்ற கதாப்பாத்திரங்கள் எழுந்து வருவதோடு கர்ணனின் ஒளிமிக்க சித்திரத்தையும் இந்நாவல் காட்டுகிறது. குலக்கதைகள், நிலச்சித்தரிப்புகள், திருவிழாக்கள், இந்திய ஞான மரபுகள் என இதன் வண்ணங்கள் முடிவிலாதவை.

நீலம், தனியொரு கவித்துவமும் பித்தும் கலக்கும் மொழியில் கண்ணனின் பிறப்பையும் கல்விக்கு முந்தைய இளமை வாழ்வையும் சொல்லும் தனி நாவல். ராதையில் பிரேமையாகவும் கம்சனில் பகையாகவும் கண்ணன் வெளிப்படுகிறான். வெண்முரசு வரிசையில் இதுவே பக்க அளவில் சிறியது.

பிரயாகை, திரௌபதியின் பிறப்பு வளர்ச்சி சுயம்வரத்தையும் சித்தரிக்கும் இந்நாவலின் ஒரு சரடு, ஒருங்கே கிருஷ்ணனின் அரசியல் தொடக்கத்தையும் முதற்போரையும் துவாரகை அமையும் விதத்தையும் கூறிச் செல்கிறது.

வெண்முகில் நகரம், இந்திரபிரஸ்தம் அமைந்த வழிகளை தொடர்ந்து செல்லும் கதை. திரௌபதியின் திருமணத்திற்கு பின் பாண்டவர்கள் தங்களுக்கென அமைக்க விரும்பும் ஒரு நகரத்தின் வழியே அவர்களின் உள ஆழங்களை சித்தரிக்கிறது இந்நாவல். பூரிசிரவஸ் , சாத்யகி ஆகியோர் இதன் மையக்கதபாத்திரங்கள். அரசியலும் அதற்கு அப்பால் மனிதர்களும் என செல்லும் கதை.

இந்திரநீலம், துவாரகை அமைந்த பிறகு, கிருஷ்ணனுக்கு தன் எட்டு மனைவியருடன் அமைந்த காதலை சொல்லும் கதை. இந்திரநீலம் என்பது சியமந்தக மணி எனும் அருமணி.அது கதை மாந்தர்களிடையே உண்டாக்கும் மாற்றத்தையும் அதற்கேற்ப ஒவ்வொருவரும் மாறும் சித்தரிப்பையும் இந்நாவல் வழங்குகிறது. அனைத்திற்கும் மையமாக இருப்பது கிருஷ்ணன். அரசியல் உதவி கேட்டுவரும் திருஷ்டதுய்மனின் பார்வையில் கதை செல்கிறது.

எட்டாவது நூலாகிய காண்டீபம், இந்திரபிரஸ்தத்திலிருந்து அர்ஜுனன் கிளம்பிச் செல்லும் பயணம். தந்து பயணத்தினூடே பிற மனைவியரையும் உறவுகளையும் கண்டடைகிறான். கிருஷ்ணனின் உறவாக அறிமுகமாகும் அரிஷ்டநேமியின் குணச்சித்திரம், அர்ஜுனின் சாகசங்கள், சுபத்திரையின் வரவு என விரிவடைகிறது.

வெய்யோன், கர்ணனின் இளமை நினைவுகள், உறவுகள், இந்திரபிரஸ்தம் அமைந்த பிறகான மனது என செல்கிறது. கதை தொடங்கும்போதே துரியோதனனால் நாடளிக்கப்பட்ட சூதர் பாடும் அங்க தேசத்து மன்னனாகத்தான் இருக்கிறான். அவன் அன்னையுடனான உறவின் ஆழங்களும், காண்டவ வனத்தை அர்ஜுனனும் கிருஷ்ணனும் அழித்து இந்திரபிரஸ்தம் அமைந்த விதமும், ஜராசந்தன் போன்ற பிற அரசர்களும் அறிமுகமகுவது போன்ற கலவையான மொழிபுகளும் ஓட்டமும் அமைந்த கதை.

பத்தாம் நாவலான பன்னிரு படைக்களம், நகர் அமைந்து பாண்டவர் ராஜசூயம் வேட்டு செய்யும் வேள்வியும், அதன் காரணமாக எதிராக அமையும் அரசியல் காரணங்களும், திரௌபதி பாண்டவரின் அஸ்தினபுரியின் வருகையும் நாற்கள ஆடலும் சித்தரிக்கப்படுகிறது. ஜராசந்தன் சிசுபாலன் ஆகியோரின் கொலைக்குப் பிறகு உக்கிரமாக உருமாறும் துரியோதனின் சித்திரத்தையும் அளிக்கிறது. இதுவரையிலான மொத்த கதையோட்டதிற்கும் ஒரு திருப்பம் போல அமைந்த நாவல்.

பதினோராம் நாவலான சொல்வளர்காடு, நாடிழந்து வனவாசம் செல்லும் பாண்டவரின் கதையின் தொடக்கத்தை கூறுகிறது. ஒவ்வொரு வேதகால கல்விநிலைகள் வழியாக அதன் தத்துவங்களை கடந்து செல்லும் ஒரு பயணமாக அமையும் நாவல். கிருஷ்ணனின் குணசித்திரத்தின் முதல் மாறுதலையும், முதன்மையாக யுதிஷ்டிரன் அடையும் உச்சத்தையும் சொல்லும் நாவல்.

கிராதம், பன்னிரண்டாவது நாவல் இவ்வரிசையில். மீண்டும் கிளம்பிச் செல்லும் அர்ஜுனின் வேறொரு பயணம். இருண்மையும், ஆன்மீகமும், கலந்த சைவப் பின்னணியில் அமைந்த நாவல். இதுவரை வந்த வெண்முரசு வரிசையிலேயே மிகுபுனைவு அதிகம் கலந்தது. நான்கு திசைதேவர்களையும் வென்று அஸ்திரங்கள் பெற்று, இறுதியில் சிவனிடம் போரிட்டு பாசுபதம் பெற்ற கதையைச் சொல்கிறது. கிருஷ்ணனின் இருண்ட பக்கங்களை சித்தரிக்கும் சரடு குறிப்பிடத்தக்கது.

நூல் பதிமூன்று, மாமலர், பீமன் கல்யாண சௌகந்திக மலரை தேடிச் செல்லும் பயணம் பற்றியது. குலாந்தகனாகிய பீமனுக்கு குருகுலத்தின் மூதன்னையரின் கதைகள் சொல்லப்படுகின்றன. பாரதநிலத்தின் முதல் பேரரசியான தேவயானியின் வாழ்வு திரௌபதியின் வாழ்விற்கு இணை வைக்கப்படுகிறது. அனைத்து மெய்மைகளையும் கைவிட்டும் காதலின் அழியா மலராகிய கல்யாண சௌந்திகத்தை அடைந்ததன் மூலம் பீமன் முழுமையடைந்த நிகழ்வு சித்தரிக்கப்பட்டுள்ளது..

நூல் பதினான்கு, நீர்க்கோலம் பாண்டவர்களின் ஓராண்டு தலைமறைவு வாழ்க்கையை பற்றியது. விராட நாட்டில் பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியுடன் வெவ்வேறு பணிகளில் அமர்ந்து தங்களை ஒளித்துக் கொள்கிறார்கள். இதோடு நள தமயந்தி கதையும் மிக விரிவாக இதற்கு இணையாக கூறப்படுகிறது. தங்கள் ஆழ்மன பிம்பத்தையே மாற்றுருவாக அடைகிறார்கள்.

நூல் பதினைந்து எழுதழல் கெளரவ பாண்டவ மைந்தர்கள் பற்றியது இந்நூல். போருக்கு முந்தைய அணிசேரல் அணிமாறல் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை உள்ளடக்கியது. அடுத்த தலைமுறை மைந்தரைப் பற்றிய சித்திரம் மிக விரிவாக இடம்பெறுகிறது.

நூல் பதினாறு குருதிச்சாரல் இளைய யாதவர் பாண்டவர்களுக்காக போருக்கு முன் தூது போவது இதில் இடம் பெறுகிறது. மூன்று முறை பாண்டவர் சார்பாக தூது போகிறார் . அது தவிர குந்தியால் அபிமன்யுவும் இளைய யாதவரால் சாத்யகியும் துரியனால் அஸ்வத்தாமனும் தூது அனுப்பப்டுகிறார்கள் வெவ்வேறு இடங்களுக்கு. போருக்கு முன்பாக அன்னையரின் உள நிலையை பேசும் நூல் இது.

பதினேழாவது நாவல் இமைக்கணம், அர்ஜுனனுக்கு கீதை உரைக்கப்பட்ட கதையைக் கூறுகிறது. மொத்த மஹாபாரதத்தையும் வேதங்களுக்கு இடையிலான மோதலாகச் சித்தரிக்கும் வெண்முரசு, எழப்போகும் புதிய வேதத்தை இளைய யாதவருக்கும் வெண்முரசின் முக்கிய கதைமாந்தர்களுக்குமான விவாதம் மூலம் விளக்குகிறது.

பதினெட்டாவது நாவலான செந்நாவேங்கை, அன்னைப் புலியென குருஷேத்ரம் காத்திருந்ததைச் சித்தரிக்கிறது. இளைய யாதவரின் தூது முறிந்தபின் இருதரப்பும் போருக்கெழுவதையும் இளமைந்தரின் போருக்கான மனநிலையையும் அவர்களின் மணங்களையும் விவரிக்கும் இந்நாவல், அன்னையரின் அச்சத்திற்கேற்ப முதல்நாள் போரிலேயே மைந்தர்கள் களம்படுவதுடன் முடிகிறது.

பத்தொன்பதாம் நாவலான திசைதேர் வெள்ளம், இரண்டாம்நாள் முதல் பத்தாம்நாள் வரையிலான போரினை விவரிக்கிறது. பீஷ்மரைக் காக்க கங்கையின் ஆணைப்படி அவருடலில் எழும் எட்டுவசுக்களும் ஒவ்வொருவராக அவரைவிட்டு நீங்க, பத்தாம்நாள் போரில் தனித்து நிற்கும் பீஷ்மர் சிகண்டியாலும் அர்ஜுனனாலும் களத்தில் வீழ்வதைச் சித்தரிக்கிறது இந்நாவல்.

இருபதாம் நாவலான கார்கடல், பீஷ்மரின் வீழ்ச்சிக்குப்பின் கர்ணன் களம்புகுவதையும், அபிமன்யு, கடோத்கஜன் மற்றும் துரோணர் ஆகியோர் வீழ்வதையும் சித்தரிக்கிறது இந்நாவல்.

இருபத்து ஒன்றாம் நாவலான இருட்கனி, கர்ணன் களத்தலைமை ஏற்ற பின்னரான போரையும், கர்ணனின் மாபெரும் கொடைகளையும், கர்ணன் வீழ்வதையும் விவரிக்கிறது.

இருபத்து இரண்டாம் நாவலான தீயின் எடை, துரியோதனன் வீழ்வதையும், பாண்டவர்களின் வெற்றியையும், பாண்டவர்களின் மைந்தர்கள் கொல்லப்படுவதையும் உள்ளடக்கிய நாவல்.

இருபத்து மூன்றாம் நாவலான நீர்ச்சுடர், போருக்குப் பிந்தைய நிகழ்வுகளில் ஆரம்பித்து நகர்ந்துகொண்டிருக்கும் நாவல் [அத்தியாயங்கள் தினசரி பிரசுரிக்கப்படுகின்றன].

Source

Comments