கணக்கியல் ரீதியாக ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி; மெகுல் சோக்ஸி உள்பட கடனைத் திருப்பிச் செலுத்தாத முதல் 50 பேரும் அடக்கம்: ஆர்டிஐயில் தகவல்

கணக்கியல் ரீதியாக ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி; மெகுல் சோக்ஸி உள்பட கடனைத் திருப்பிச் செலுத்தாத முதல் 50 பேரும் அடக்கம்: ஆர்டிஐயில் தகவல்


banks-technically-write-off-over-rs-68k-cr-loans-choksi-among-50-top-wilful-defaulters-rti

வைர நகை வர்த்தகர் மெகுல் சோக்ஸி கடன் உள்பட வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 பேரின் கடன் என மொத்தம் ரூ.68 ஆயிரம் கோடி கடனை “கணக்கியல் ரீதியாக” வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி அளித்த தகவலில் தெரியவந்துள்ளது.
“டெக்னிக்கலி ரைட் ஆப்” அல்லது “கணக்கியல் ரீதியாக தள்ளுபடி” என்பது வங்கியின் வரவு-செலவுக் கணக்கில் மேற்கொள்ளப்டும் செயலாகும். அதாவது ரிசர்வ் வங்கிக்கு அளிக்கும் கணக்கில் ஒரு வங்கி தனது வாராக்கடனை, செயல்படா சொத்துகளைத் தள்ளுபடி செய்ததாக கணக்கீடு ரீதியாகக் காண்பிக்கும். ஆனால், கடன் கொடுத்த வங்கிக் கிளையைப் பொறுத்தவரை இந்தக் கடன் தள்ளுபடி செய்யப்படாது. கடன் வாங்கிய நபரிடம் இருந்து கடன் தொகையைப் பெறும் முயற்சி தொடர்ந்து நடக்கும்.
தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே தாக்கல் செய்த மனுவில், பிப்ரவரி 16-ம் தேதி வரை கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 நபர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். அதில் ரூ.68 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது
இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் சாகேத் கோகலே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''கடந்த பிப்ரவரி 16-ம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி எழு்பினார். அதில் கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 5 0நபர்கள் பட்டியலைக் கேட்டிருந்தார். அந்தக் கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாக்கூர் இருவரும் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 பேரின் பட்டியலைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியில் கேட்டிருந்தேன்.
ரிசர்வ் வங்கியின் தகவல் அதிகாரி அபய் குமார் கடந்த 24-ம் தேதி எனக்குப் பட்டியலை அளித்திருந்தார். அதில் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை வங்கிகள் சார்பில் ரூ.68 ஆயிரம் கோடி கடன் கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் முதல் 50 பேரின் பட்டியலில் மெகுல் சோக்ஸியின் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் மெகுல் சோக்ஸிக்குச் சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் சார்பில் ரூ.5,492 கோடி கடன் , கில்லி இந்தியா சார்பில் ரூ.1447 கோடி கடன், நட்சத்திர பிராண்ட் சார்பில் ரூ.1,109 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மெகுல் சோக்ஸி, ஆன்டிகுவா பர்படாஸ் தீவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார். அவரின் உறவினர் நிரவ் மோடி லண்டனில் இருக்கிறார்.
2-வது பெரிய கடன்காரராக ஆஇஐ அக்ரோ நிறுவனம் ரூ.4,314 கோடி கடன் பெற்றுள்ளது. மேலும், சந்தீப் ஜூஜன்வாலா, சஞ்சய் ஜூஜூன்வாலா ஆகியோரும் இந்தக் கடன் பட்டியலில் அடக்கம். அடுத்ததாக, வைர வியாபாரி ஜதின் மேத்தா ரூ.4,076 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார். இவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும் சிபிஐ அமைப்பு தேடி வருகிறது.
2 ஆயிரம் கோடி வரை கடன் பெற்ற வகையில் ரோட்டாமாக் குளோபல் நிறுவனம், கோத்தாராரி குழுமம் (ரூ.2,850 கோடி), குடோஸ் கெமி (ரூ.2,326 கோடி), பாபா ராம்தேவ் பாலகிருஷ்ணா குழு நிறுவனத்தின் ருச்சி சோயா நிறுவனம் (ரூ.2,212 கோடி), ஜூம் டெவலப்பர்ஸ் பிரைவேட் (ரூ.2,012 கோடி) ஆகியவை உள்ளன.
ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்ற வகையில் 18 நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் விஜய் மல்லையாவன் கிங் பிஷர் நிறுவனமும் அடங்கும். ஆயிரம் கோடிக்குள்ளாக 25 நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் தனிநபர்கள் முதல் நிறுவனங்கள் வரை இருக்கின்றன.
50 பேர் பட்டியலில் அதிகமான கடன் பெற்றது தங்கம், வைர நகை வர்த்தகர்கள்தான். முக்கியமான தேசிய வங்கிகளில் இவர்கள் கடன் பெற்று வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்று மறைந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களைப் பிடிக்கும் முயற்சியும், கடன் மீட்கும் முயற்சியும் தொடர்ந்து நடந்து வருகிறது''.
இவ்வாறு சாகேத் கோகலே தெரிவித்தார்.

Source:Hindu Tamil